முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடுநிசி மதியம் (தொகுப்பிலிருந்து சில கவிதைகள்)


நடுநிசி மதியம் - ரமேஷ் பிரேதனின் பதினான்காவது கவிதை நூல்.
மரபும் நவீனமும் கலந்த வாசிப்பின் இன்பம் பயக்கும் சந்தப் பாவியம். படிமம், உருவகம், குறியீடு யாவும் விருத்தக் கட்டமைப்பில் அமைந்து வாசிப்பின் திளைப்பையும் திகைப்பையும் ஒருங்கே வெளிப்படுத்தும் பின்நவீனப் பாப் பனுவல். ஆழ்ந்து அகன்ற நுண்ணிய மொழிதலில் கவித்துவத் திளைப்பை (juissance poétique) உண்டாக்கும் ஐம்புல உச்சாடனம்.
உறுப்புகளைக் கலைத்துக் கோர்த்து மாற்றிப் பொருத்தி;
ஆண் + பெண் = ஆபெண் என  முப்பாலை மாற்றி அடுக்கித் தொகுத்து; பொழுதுகள்தோறும் புதிது புதிதாய் உடம்புகள் வனையும் சொல்வினைக் குயவனின் புதிய வார்ப்புகள்.




நடுநிசி மதியம்



ரமேஷ் பிரேதன்







புதுஎழுத்து














ஆசிரியரின் பிற கவிதை நூல்கள்

1.   இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும்

2.   கறுப்பு வெள்ளைக் கவிதை

3.   பேரழகிகளின் தேசம்

4.   சக்கரவாளக் கோட்டம்

5.   கொலை மற்றும் தற்கொலை பற்றி

6.   உப்பு
7.   நாவற்கொம்பு
8.   அதீதனின் இதிகாசம்
9.   காந்தியைக் கொன்றது தவறுதான்
10.  சாராயக்கடை
11.  பன்றிக்குட்டி
12.  அயோனிகன்
13.  மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்



















“ஒருமொழி தனக்கான மகாகவியை
தானே உருவாக்கிக்கொண்டபோது;
திக்குகள் எட்டும் சிதறி - தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து - வெள்ளம்
பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது - பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட…


நடுநிசி மதியம்
 
பெண்பேய் வாழும் தொல்தமிழ்க் கதைக்குள்
பேயைப் புணரும் இச்சையில் அலைந்து
பைத்தியம் பிடித்துத் தற்கொலை செய்த
எளிய கவிஞனைப் பற்றிய நினைவுகள்
வாழும் இன்றைய தலைமுறைக் கில்லை.
பனுவல் வெளியே பேய்கள் இல்லை
புணர்ச்சியும் இல்லை கொலையு மில்லை
நீலி திரியும் ஆலங் காட்டில்
பேயைப் புணர்ந்த முக்கண் சடையன்
ஆட்டம் பார்த்தால் பித்தம் தெளியும்
போய்வா கவியே பேயின் யோனி
பெளர்ணமி இரவில் வான்தலை சுடரும்”.
ஆலங் காட்டில் நடுநிசி மதியம்
எலும்பும் தோலும் பேன்தலை விரிசடை
சடலம் எரியும் வாடை குமைந்திட
காரை பேய்மகள் எதிரில் வந்தாள்
தாய்மை பிசகிய பேய்மையின் தரிசனம்
புழுக்கள் நெளியும் சொற்களின் கவித்துவம்
மாயம் செய்யும் மந்திரம் மொழிந்தாள்
தலைகள் சுழற்றி விழுதுகள் விசிறி
ஆடும் ஆலம் ஓசை அடங்கிட
காட்டின் அமைதி இரவின் விளிம்பில்
ஒற்றை விழுதைக் கழுத்தில் சுற்றிய
கவிஞனின் சடலம் அந்தர நடனம்
கலைத்துவம் செறிந்த தற்கொலை மரணம்
காரை காற்பேய் கவிஞனைக் கொன்றது.

செம்மொழிப் பனுவலில் ஆண்பேய் வாழ்ந்திட
அனுமதி இல்லை; பெண்பேய் ஃபாசிசம்
புதுவைக் கவிஞன் செத்தும் தரிக்க
இடமற் றலைந்தான் பனுவல் வெளியே
பேயுடன் வாழ்பவன் கவிதை செய்வான்.
பேயைப் புணர்ந்தவன் கடவுள் ஆவான்
செம்மொழி கவிஞன் கடவுள் பெண்பேய்
சொற்களைத் தின்று தற்கொலை பட்டேன்.

0 0 0



















பாம்புப் படம்
அல்குல் குளத்தில் குப்புற மிதந்த
அம்மணக் குண்டி ஆம்பிளை உடலை
இருவர் மூவராய் நீந்திச் சென்று
இழுத்து வந்தே படியில் கிடத்தினர்
புரட்டிப் போட்டதில் குறியில் தைத்த
பொம்பளைப் பாம்பு படத்தை விரித்தது
சுற்றி நின்றவர் பயந்து விலகினர்
சீறியப் பாம்பின் படத்தை அமுக்கி
பக்குவ மாகப் பிணைப்பை அவிழ்த்து
பாம்பைத் தூக்கி நீரில் போட்டனர்
செங்குத் தானக் குளத்தின் ஆழம்
நீந்தி மறைந்தது பெண்குறி நீளம்
நீலம் பாவிய உடலைப் பார்க்க
நான்கு கரத்துடன் புருவம் இணையும்
புள்ளியில் தொப்பூழ் குழிபோல் தழும்புடன்
விறைத்துக் கிடந்தது; தூக்கிச் சென்றோம்
இரவும் பகலும் வெற்றிலைப் பாக்குடன்
கதைகளைப் புனைந்து ஊர்வாய் மென்றது
வாய்களைக் கடந்து ஊர்களைத் தாண்டி
முக்கடல் சூழ்தமிழ்க் கண்டம் கடந்து
சிவனும் சிவையும் புணர்ந்து மிதந்த
குளக்கதை வளர்ந்து திராவிட ஆரிய
மொழிவழி படர்ந்து பனிமலை முடிகுடி
சொல்கதை மரபில் இரண்டறக் கலந்தது
நீலம் ஊடிச் செத்த உடலை
ஊர்பேர் அறியா அநாதை கணக்கில்
புதைத்த மேட்டில் பாம்பு படுத்தது
அரவம் தீண்டி மரணம் கண்டவர்
கடவுளைத் தொட்டு கதையாய் நின்றார்.
0 0 0




வாசகர் மரணம்
அப்படித் தானோர் அதிசயம் நிகழ்ந்தது
ஒவ்வொரு பத்து ஆண்டுக் கொருமுறை
என்னைப் படிக்க ஒருவர் பிறப்பார்
அறிவில் தெளிவில் உருவில் மொழியில்
அவரைப் போலவே இவரும் இருப்பார்
பாலில் வேறாய் மாறியும் பிறப்பார்
படிக்கப் படிக்க அவரில் நானே
ஆணாய் பெண்ணாய் புதிதாய் பிறப்பேன்;
பிரதியில் வாழும் சொந்த உடம்பில்
தனித்த பால்நிலை செயல்படும் மொழிதல்
இல்லை; படிப்பவர் பாலை உடுத்தும்;
பிரதிக் குள்ளே ஆக்கியோர் மரணம்
வாசிப் பவரைப் பொறுத்தே அமையும்;
பிரதியின் மரணம் என்பது இல்லை
ஆக்கியோர் மரணம் என்பது புனைவு;
புனைவில் வாழும் உயிர்கள் எல்லாம்
இன்மை இருப்பு கடந்த இயல்பு;
உண்மை உரைப்பேன் உலகத் தீரே
வாசகர் மட்டுமே மரணிக் கின்றார்.
ஒவ்வொரு முறையும் என்னை எடுத்து
தொட்டுப் பிரித்துப் படிக்கும் தன்னிலை
தன்னைத் திணித்து என்னை நிறைக்கும்
வாசிப் பபத்தம்: வாசகப் பனுவல்.
என்றோ படைத்தேன் செத்தேன் மனிதர்
நினைவில் பதங்க மானேன்; நிற்க,
காலங் காலமாய் மொழியில் நிலைத்தது
ஒற்றைப் பிரதி: படைத்தவர் பனுவல்.
பிரதிக் குள்ளே பதுங்கிக் கொண்டேன்
பிரதியைப் புனைவு கடக்கும் இறுதியில்
நானும் பிரதியும் மட்டும் மீந்தோம்.
0 0  0



வரலாற்றில் தொலைந்தவன்
சங்கம் அறியாச் சொற்களைப் பேசி
கைப்பிடி தீவில் வாழும் இனக்குடி
தமிழ்வழி விளைந்த ஆதி மாந்தர்
விண்மீன் விதைத்த அறுவடை இரவில்
நாவாய் செலுத்தி புகார் கரையில்
வாணிபப் பொருளைக் கடைவிரிக் கின்றார்
கூடையில் மூட்டையில் கொணர்ந்த விண்மீன்
கொட்டிக் கொடுத்துப் பண்ட மாற்றாய்
இரும்பில் வடித்த வகைவகை ஆயுதம்
பலப்பல கடவுள் பொம்மைகள் மற்றும்
கைப்பிடி தீவு அறியா கதைகள்
வாங்கிச் செல்வார் கால காலமாய்
ஆழியில் ஒருநாள் புகார் அமிழ்ந்தது
இருட்டில் எரியும் விண்மீன் கற்களைத்
தேடிச் சேர்த்து கூடையில் ஏற்றி
நாவாய் மனிதர் கிழக்கில் ஒதுங்கினர்
கரையில் நின்ற நகரம் இல்லை
புத்தவி காரையின் மொட்டை கோபுரம்
பிக்குவின் தலையாய் உருண்டு கிடந்தது
பெருங்குடி வாழ்ந்த மாபெரு நகரம்
மாயமாய் மறைந்தது புதிர்வழிக் கதைபோல்
உள்ளதைக் கண்டுத் தொல்குடி திகைத்தது
ஆழியில் நகரம் புதைந்த செய்தியை
மாற்றாய் பெற்று ஒளிரும் மீன்களின்
கூடைகள் விடுத்து நாவாய் நகர்ந்தது
வெட்ட வெளியின் வெறுமையி லிருந்து
ஒற்றை மனிதன் கடலை நோக்கி
ஓடி வந்தே இருகை அசைத்தான்
தனியனை ஏற்றி நாவாய் நகர்ந்தது
ஆதித் தமிழர் வாழும் தீவில்
ஆழியில் தப்பிய புகார் இளைஞன்
கதைகளைத் தின்று வாழும் கலையின்
அதிசயச் சான்றாய் நின்றான் நிலைதான்
கரிய மனிதரின் தொல்மொழி வெளிச்சம்
பேசிடும் சொல்லால் உள்ளம் ஒளிரும்
வசப்படும் மொழியால் அன்புப் பெருகும்
வெற்று வெளியில் தனித்து நின்றவன்
சுற்றிச் சுழலும் கைப்பிடி தீவில்
கதைகள் புதியவை காட்சிகள் புதியன
ஆழியில் புதைந்த பெருநகர் மாந்தர்
கொடுங்கன வாகத் தொடரும் கொடுமை
நூற்றாண் டுகளாய் இரவின் நிழலாய்
தொடரும் வாதையி லிருந்துத் தப்பி
ஓடியக் கால்கள் தீவின் விளிம்பில்
படகை வளித்து கடலில் தொலைந்தான்
நீர்வெளி நீலம் தமிழ்மொழி சொல்நிலம்
கால வெளியில் தேடிடும் அநாதை
தொலைந்தத் தமிழன் முதுகில் கனக்கும்
ஓலை நறுக்கில் எழுதிய கவிதைகள்.
0 0 0
















நாத்திகனின் கடவுள்
நினைத்த பொழுதில் ஆணாய் பெண்ணாய்
உடம்பின் கட்டடத் தன்மை குலைத்து
உருவம் மாற்றிடும் கலையில் தேர்ந்தவன்;
தத்துவத் தேடலில் கடவுளைப் அடைந்தவன்;
மனிதரைப் பிரித்துக் கலைத்துக் கோர்க்கும்
கடுந்தொழில் நுட்பப் பாடம் வகுப்பவன்;
பாட்டுக் கூத்துக் கொண்டாட்ட வாழ்வின்
முடிவில் கடவுளைப் புணர விழைந்தவன்;
இருட்டில் உடம்புத் துலங்காக் கடவுளைத்
தொட்டுத் தடவி மேலும் கீழும்
புரட்டிப் போட்டுப் பிளந்துப் பார்த்தவன்;
ஆண்குறி பெண்குறி இரண்டும் இல்லா
கடவுளைப் புணரப் பாலறம் தடுத்திட
தன்நிலை குழம்பி தயங்கி நின்றவன்
குறிப்ப றிந்தே கடவுளும் பேசும்:
"
கடவுள் என்பது ஒற்றை இருப்பு;
ஒற்றை இருப்பில் பால்குறி தேவையின்
அவசியம் என்ன? முகத்தின் வாயால்
என்நிழல் தின்று ஆசன வாயால்
மலமாய் கழிக்கும் எந்திர உடலாய்
என்னைப் படைத்தது அதுவொரு சுயம்பு
அனைத்தும் அறிந்தது என்னை ஒத்தது
எனவே எனக்கும் தன்னைப் போலே
பால்குறி என்பதைப் பொருத்த வில்லை
காமம் கலைகள் கடவுள் மூன்றும்
புலன்களைப் பெருக்கும், கலவிக் கருவிகள்
இனத்தைப் பெருக்கும்; ஆணாய் பெண்ணாய்
உடற்புலன் மாற்றும் நுட்பம் அறிந்தோன்
பால்நிலைத் துறக்கும் வழிமுறை அறியாய்
உறுப்புகள் கடந்த காமத் துய்ப்பே
கடவுளின் உடம்பில் இரண்டற கலப்பது
என்னில் இரண்டற கலந்தவன் இறுதியில்
என்னிலை அடைவான் கடவுள் ஆவான்"
பேசிய கடவுள் அமைதி அடைந்தது
கடவுளைக் கலந்தபின் மனித நிலைக்குத்
திரும்பி வருவதில் பாதைகள் மறக்கும்
புதிர்வழிப் பாட்டையில் சித்தம் திகைக்கும்
குருதி நொதித்த உடம்பு வற்றி
காய்ந்த விறகாய் பற்றி எரியும்
இருநிலை பிளவில் வாலைச் சொருகி
ஆப்பை அசைத்த குரங்காய் தவித்தான்;
உறங்கா இரவின் விளிம்பில் முளைத்த
பரிதியில் உரசி விறகாய் எரிந்தவன்
சாம்பலாய் மீந்ததும் நாத்திகன் ஆனான்.
0 0 0



















ஆண்மகள் பெண்மகன்
ஒருதுளி கண்ணீர் ஒருதுளி எறும்பு
உருட்டிக் கொண்டு செல்லும் தூரம்
நெடுவழி இரவில் ஈரக் கோடுகள்
இடச்செவி நனைக்கும் பலதுளி எறும்புகள்
தொலைவில் தேங்கிய நிலவொளிக் குளத்தில்
செத்துமி தக்கும் வெள்ளை வேட்டியில்
நனைந்தக் குருதியில் பெண்பால் வாசனை
கொலையின் இலக்கணம் இரவு வகுத்தது
இருளை அறியா பகலின் விளக்கம்
எறும்புகள் மொய்க்கும் அந்தகக் காட்சிகள்
நிலவுமி தக்கும் கோயில் குளத்தில்
செத்துமி தக்கும் கற்சிலை மூலவர்
நீரில் மிதக்கும் கருங்கல் அதிசயம்
குருட்டுக் கண்ணீர் கடவுளைக் கொல்லும்
கடவுளின் வேட்டியில் பெண்பால் குருதி
பாதி செத்தது ஆண்பால் என்றால்
எஞ்சி நிற்பது பெண்பால் மிச்சம்
பாதியைப் பிய்த்துக் குளத்தில் எறிந்தவள்
மீதியில் உயிர்த்து ஒற்றைக் கண்ணால்
அழுவதில் எறும்புகள் முளைக்கும்
பாதகி தேவகி பைரவிப கீரதி
எந்நாள் பெண்ணாள் ஒற்றையில் நின்றாள்?
ஒவ்வோர் இரவும் குளத்தைச் சுற்றி
ஒப்பாரி வைக்கும் ஒற்றை கால்தடம்
யாவிலும் காலைப் பனித்துளி தேங்கும்
ஆண்பெண் உறவின் ஒவ்வோர் இரவும்
கொலையில் முடிந்து அழுகையில் விடியும்
செத்தவர் எல்லாம் கடவுள் ஆவதால்
கொன்றவர் கடவுளைப் படைத்தவர் ஆவார்
ஒருமுறை கடவுளை ஆண்மகள் செய்தால்
மறுமுறை கடவுளைப் பெண்மகன் செய்யும்
இந்தப் பெளர்ணமி யோனி மிதந்தால்
அடுத்தப் பெளர்ணமி லிங்கம் மிதக்கும்
கருவறை ஒற்றை கண்ணில் இருந்து
குளத்தை நோக்கிச் சாரையாய் செல்லும்
எறும்புகள் அறியுமா ஆண்வலி பெண்வலி
ஒவ்வொரு இரவும் ஒருவரை ஒருவர்
கொன்று புதைக்கும் வாழ்க்கை ரகசியம்?
நேற்றைய நிலவில் கோயில் குளத்தில்
கடவுளின் புடவையில் ஆண்பால் குருதி.
0 0 0






















அம்மண நாடகம்
இறைமை நிலையின் உச்சம் அம்மணம்
ஆடை கொண்டே உள்ளம் உடுத்தி
உடம்பைத் திறந்தே நிற்கும் மனிதம்
கொலைசெய் அல்லது கொலைபடு என்பதின்
கட்டளை மறுக்கும் நிலையினை அடையும்;
அறம்செய் காமம் விடுதலை பயக்கும்
அடைபடும் உடம்பில் ஐம்புலன் இறக்கும்
இறக்கும் மனிதம் துணைப்பிணம் தேடும்
உடம்புகள் ஒடுக்கும் ஆயுத(ம்) மொழிகள்
இரண்டும் பாசிசம்; பாசிசம் மறுக்கும்
ஐம்புல அம்மண ஆர்கசச் சிலிர்ப்புகள்
உடம்புகள் நிகழ்த்தும் தொல்குடி நடனம்
உடம்பின் வழியே உடம்புகள் கடந்து
அகத்தில் அகல்விளக் கேற்றும் விடுதலை
ஆடையைக் கலைந்து அம்மணம் கடந்து
கண்டதும் உண்டோ உலகம் இதுவரை
கண்ணீர் அறியா மானுடர் கண்கள்?
அனைத்தி லிருந்தும் விடுதலை செய்யும்
மார்க்கமும் இல்லை கடவுளும் இல்லை
எதிரில் நிற்கும் அம்மண உடம்பே
ஆகப் பெரியக் கடவுளாய்த் தோன்றும்
அம்மண எல்லையைத் தொடுவதி லிருந்தே
விடுதலை நோக்கிய பாதைகள் தொடங்கும்
அம்மணக் கலகம் அம்மணப் புரட்சி
அம்மணச் சமூகம் அம்மணத் தாய்மொழி
அம்மணக் கடவுள் அம்மண இறையியல்
அம்மண மார்க்சியம் அம்மண இயல்இசை
அம்மண அறிவியல் அம்மணப் பெண்ணியம்
அம்மணத் தேசியம் அம்மண ஐம்புலம்
அம்மண ஐம்புலன் அம்மண பூதகம்
அம்மண அம்மணம் அம்மண மனமே.
0 0 0



கடவுளின் குருதி
தமிழ்நிலம் தோன்றிய மனிதர் வாழ்வில்
முழுமை விடுதலை நுகரும் காலம்
வாய்ப்பது என்றோ? இறைவா எங்கள்
நிழலைக் கண்டு மருண்டப் பொழுதில்
குத்திக் கொல்வதில் தொடங்கிய வன்செயல்
இறுதியில் உன்னைக் கொல்வதில் முடியும்
அதற்கு முன்பே ஒருவரை ஒருவர்
குத்திக் கொன்று சாவதில் விடுதலை
கண்டோம் அறத்தின் இலக்கணம் பிழன்றோம்
உன்னைக் கொன்றால் அனைத்தி லிருந்தும்
விடுதலை அடைவோம்; எங்களை நாங்கள்
கொல்வதில் வழிவகை ஆயிரம் கண்டோம்
சிவப்பு நிறத்தில் மனிதர் குருதி
பார்த்துச் சலித்து அலுத்தக் கண்கள்
இறைவா உந்தன் குருதியின் நிறத்தைப்
பார்க்க ஆவல் அள்ளி முகத்தில்
பூசிக் களிக்க மற்றவர் மேலே
வாரித் தெளிக்க கொள்ளை ஆசை
பச்சை நிறத்தில் குருதி செந்தேன்
அடர்த்தியும் சுவையும் ஒருங்கே திரண்ட
பாகு என்பதை வேற்றுக் கோளகை
தோழி சொன்னாள்; ‘கடவுளைக் கொல்வதில்
உங்கள் இனவியல் சிக்கல் தீரும்
உங்கள் உடம்பில் கடவுளின் குருதி
பட்டுத் தெறித்தால் சரித்திரம் நெடுகிலும்
செய்த பாவம் தொலையும்என்றாள்
இறைவா முருகா தமிழர் கைகளால்
கொலைபடு தோழா இழப்பதற் கெம்மிடம்
மொழியும் இல்லை நிலமும் இல்லை
உன்னைத் தவிர சரித்திர வெளியில்
அநாதை எமக்கு இருப்பவர் யாரோ.  
0 0 0




எலிப்பொறி

ஆணா பெண்ணா  இரண்டும் கடந்த

உடம்பின் பால்நிலை  தர்க்கம் மறுத்து

உள்ளம் ஒழுகும் வடிவம் உடுத்திய

இருப்பே கடவுள் என்பதை தெளிந்தாய்

நல்லது; கடவுளின் மதமும் குமுகம்

சுட்டும் தன்னிலை ஒன்றின் மதமும்

ஒன்றென எப்படி அறுதியி டுகிறாய்?

மொழிவழி நிலைத்த பெயரடை யாளம்

தமிழர் என்றால் தமிழ்த்தாய் என்பவள்

என்னச் சாதி? கடவுளின் மதமும்

மொழித்தாய் சாதியும் என்ன வென்றே
சொல்வாய் அப்பா? பால்பல் விழுந்த
செம்மகள் கேட்டாள் அதுவொரு காலம்;
பொய்பல் அணிந்த முதுமகள் கேட்கும்
கேள்விகள் பழயவை காலம் புதியது
கடவுளின் மதமும் தமிழ்த்தாய் சாதியும்
தெரியா கேள்வியில் திகைத்துத் தவித்தேன்
அகவை நூறை நாளைத் தொடுவேன்
முழுமை அடையா மூளி வாழ்வின்
நூறின் இறுதியில் கடைசி இரவில்
தூக்கில் தொங்கி மகளிடம் தோற்பேன்
மனிதர் வரைந்த புதிர்வழிப் பாதைகள்
கடவுளை அடையும் அறவிளை யாட்டுகள்
மனிதர் அறிந்தார் படைத்தார் ஆயிரம்
தம்முகம் பார்க்க கடவுளைக் கண்டார்
கடவுள், மொழியால் செய்த எலிப்பொறி;
புதிர்வழி வாழ்வில் தமக்குத் தாமே
வைத்தப் பொறியில் வடையும் மனிதர்
எதிரில் தயங்கும் எலியும் அவரே.
0 0 0


















பாலறம்
கடவுள் மட்டும் இறுதியில் மீந்தது
அவனா அவளா அதுவா எதுவென
தொட்டுத் தடவித் தெளிதல் எங்கனம்?
அருகில் நின்று வாசனை முகர்ந்து
பாலின் கவிச்சைத் தன்மை தெளிந்து
அறிதல் எளியது; பால்மணம் மாறா
கடவுளின் வியர்வை மழையின் வாசனை
நனைதல் வேண்டும்; ஆண்பால் பெண்பால்
கடந்த இருப்பென நனைந்தவர் சொல்வார்
பன்மை அறியா ஒருமை இருப்பில்
பால்குறி தேவையின் அவசியம் இல்லை
கருத்தாய் மட்டும் விளங்கும் கடவுள்
பொருளின் மூன்று நிலைகளில் இல்லை
பால்நிலை கடந்த தமிழ்வழி சொற்கள்
கடவுளை விளக்கிக் கடவுளாய் நிற்கும்
மொழியின் வாசனை ஆணா பெண்ணா
அறுதி யிட்டால் கடவுளின் பாலை
பகுக்கலாம் அறியலாம்; கடவுளைக் கொன்றால்
மொழியைக் கொல்லலாம் மொழிவழி வாழும்
இனத்தைக் கொல்லலாம்; நானும் நீயும்
இருமை எதிரிடை நமக்கு நடுவில்
காலம் இறுதியில் ஒற்றைக் கணத்தில்
தாய்மொழி இறுதியில் ஒற்றைச் சொல்லில்
வாழ்க்கை இறுதியில் ஒற்றை மூச்சில்;
கடவுள் மட்டும் இறுதியில் மீந்தது
அவனா அவளா அதுவா எதுவென
தொட்டுத் தடவித் தெளிதல் எங்கனம்?
0 0 0





தெய்வ முலை
கற்சிலை இருமுலை கடித்துத் தின்னும்
கொடியவன் நானெனும் அறிவுத் தெளிவு
உன்னைப் போலே எனக்கும் உண்டு
கொங்கைகள் பெருத்தப் பிடியிடை சிலைகள்
கடித்துத் தின்ற வெற்று மார்புகள்
குருதி வழிய நிற்கும் கோலம்
கோயில் நிறைந்த சோழ மண்டலம்
உன்னால் விளைந்தது தொண்டை மண்டலம்
என்னால் விளைந்தது இருவரும் கொடியவர்
காடுகள் திரிந்து பாறைகள் அடர்ந்த
சிலைகளின் நாட்டில் அரிமா வரிப்புலிப்
பசிக்கு ஒருவாய் கவ்விப் புசிக்க
திரள்முலை கருங்கல் உடலில் கிடைத்தால்
ஒவ்வா தென்று ஒதுக்குதல் முறையோ
வரிமெய் நண்பா பிடறிச் சிலிர்க்க
சொல்வேன் செவிமடு; உன்னையும் என்னையும்
சிலையாய் வடித்தச் சிற்பியைத் தின்றோம்
உண்மையில் அவனே சதையாய் நின்ற
கடைசி மனிதன் மற்றவை கருங்கல்
கருவறை உள்ளே கடவுளைக் கண்டோம்
அதுவும் கருங்கல் கோயில் முழுமையும்
ஊர்த்தெரு அரண்மனை குடிகளும் அரசனும்
செடிகொடி ஊர்வனப் பறப்பன குளத்தில்
அசையும் நீரும் மீனும் கருங்கல்
கருஞ்சிலை இருமுலை மட்டிலும் சதையாய்
தின்னத் தின்ன மீண்டும் மீண்டும்
வளரும் அதிசயம் அற்புதம் பெண்சிலை
மார்பில் மட்டிலும் சதைப்பழம் காண்பது
கனவா நினைவா கற்பிதப் புனைவா
பெண்மை என்பது முலையில் உள்ளது
தாய்மை என்பது குருதிப் பாலாய்த்
திரியும் வேதிமை முலைவழிச் சுரப்பது
சோழ மண்டலம் தொண்டை மண்டலம்
எல்லாம் கருங்கல் கன்னிக் கற்சிலை
கன்னிமை கெடாமல் தாய்மை அடைவது
கலைவழி சிலையில் நிகழ்வது நண்பா
தெய்வம் எனினும் யோனியும் லிங்கமும்
வெறுங்கல் எனவே முலையை வழிபடு.
0 0 0























தொலைந்த பனுவல்

1.
தாய்ப்பால் சுரக்கா கண்ணகித் தண்முலை
தீப்பால் சுரந்தக் காதையில் தப்பிய
ஓலைச் சுவடியில் உள்ளதைச் சொல்வேன்
காலம் வென்ற தொல்கதை இளங்கோ
சாத்தன் சொல்ல மறந்தப் பனுவல்
மதுரையை எரித்த நெருப்புத் தொடாத
பின்னை நவீனக் காப்பியம் செய்தவன்
தீயில் கருகிச் செத்தான் செத்ததால்
அந்தணன் அல்லன் சூத்திரன் அறிக:
கதையின் காலம் சிலம்பை மூத்தது
தீயால் மதுரையைச் சிலம்பி எரித்தாள்
வைகைப் பொங்கி தென்நகர் நனைத்த
புனைவின் தொன்மம் தமிழர் நினைவில்
மூழ்கியக் கபாடம் மீண்டும் எழுந்து
மொழிவழி நினைவில் மிதந்துத் திரியும்
ஆழியில் தப்பிய நவீன மதுரை
நீறாய் மீந்தது அதற்கும் முன்னே
எழுதியப் பனுவலைப் பேசப் போகிறேன்
மதுரையைப் புதைத்த வைகையைப் பற்றிய
கதைவழி அறிவது யாதெனில் தமிழர்
என்பவர் கதைகளா லானவர் இறுதியில்
கதையைத் தவிர்த்து வேறொன் றாக
மீந்தவர் இல்லை கதையைக் கேட்பீர்:
ஊரில் ஒருநரி அதோடு கதைசரி.

2.
ஆழியில் அமிழ்ந்தத் தமிழ்நிலம் தாண்டிய
கதைவழித் திரண்டது மீள்தமிழ்த் தேசம்
மொழியால் விளைந்த வரைபடம் வளர்ந்தது
மாண்டவர் மறுபடி புரண்டுப் படுத்தனர்
மீள்உயிர் பனைவிதை குருத்து விழித்தது
வலத்தோள் கிளியுடன் கருங்கல் நிறத்தவள்
நெற்றிக் கண்ணனை ஏறிப் புணர்ந்ததில்
கழுத்தில் சுற்றிய பாம்பு திகைத்தது
கிழக்குக் கடல்வரை தோள்கிளி பறந்தது
மேற்குக் கடல்வரை பாம்பு ஊர்ந்தது
கிழக்கையும் மேற்கையும் அறுதி இட்டதும்
வடக்கில் ஆரியப் பகைதிசை வளர்ந்தது
தெற்கில் லெமூரியப் புதைநீர் விரிந்தது
எல்லை வகுத்ததும் வெட்ட வெளியில்
சிவையும் சிவனும் கட்டிப் புரண்டனர்
எண்திசை உருண்ட உடம்புகள் வழியே
புதைந்தவர் முளைத்தனர் பாக்களை யாத்தனர்
 
3.
தலைவனின் நெற்றிக் கண்ணைப் பிடுங்கி
இடமுலைக் காம்பில் பதித்தனள் தலைவி
அவளே மதுரையை எரித்த கண்ணகி
சிவைமுலைப் பதித்த சிவனின் கண்ணே
மதுரையை எரித்தது; அதுவொரு காலம்
கதைக்குள் கதையாய் எழுதிய கதையில்
மதுரை என்கிற எரியும் காட்டை
பொங்கி அணைத்தது வைகை வெள்ளம்
இடமுலை பிய்த்துப் பெருக்கிய நெருப்பை
வலமுலை பிழிந்து வளர்நீர் திரண்டு
வைகைப் பெருகி மதுரை அணைந்தது
ஆதி மதுரையை எழுதிய பாவலன்
மனிதர் உறவில் ஆண்பெண் இடையே
அரசியல் கண்டான் முலையே எரித்தது
முலையே அணைத்தது காட்டின் அரசியல்
பழைய கதையில் எரிந்த மதுரை
மேற்குத் தொடர்மலை இணைந்த காடு
தலைவன் தலைவி பிணக்கால் நிகழ்ந்தது
அணைந்த காட்டின் சாம்பலி லிருந்து
சொற்கள் முளைத்து வாக்கியம் தழைத்தன
கிளியும் பாம்பும் பெருகித் திரும்பின
கிழக்கில் இருந்து கதைகளைக் கொணர்ந்த
கிளிவழிச் செய்திகள் அரசியல் வரைந்தன
மேற்கில் இருந்து பாம்புக் கதைகள்
அரசைக் கட்டிச் சட்டம் வகுத்தன ;
கோவலன் கண்ணகி வாழ்ந்து நடித்த
இளங்கோ கதையில் மீண்டும் ஒருமுறை
எரிந்த மதுரை ஐந்திணை செழித்துச்
செந்தமிழ் வளர்ந்த பாண்டிய நாடு
முலையால் எரித்தான் அணைக்க மறந்தான்
சாம்பலில் மீந்தது நாட்டின் அரசியல்
பழைய கதையில் சிலம்பு இல்லை
நாடும் இல்லை அரசும் இல்லை
கடலில் இருந்து பிறந்தத் தமிழர்
திருத்தி எழுதிய புதிய கதையில்
ஆழி இல்லை பேரலை இல்லை
கண்ணைத் தொலைத்த சிவனும் இல்லை
ஏறிப் புணர்ந்தச் சிவையும் இல்லையே.


0 0 0

















கழுமரப்பாடு

அரசனின் ஆண்குறி ஆசன வாயில்
ஏறிய தைப்போல் கழுமர உச்சியில்
சொருகப் பட்டேன் மலத்துடன் குருதியும் 
வழுவழு மரத்தில் வழிந்திடும் நாற்றம்
கூடியக் கூட்டம் அருவருப் போடு
மூக்கைப் பொத்தி வேடிக்கைப் பார்க்கும்
கல்லூரி விட்டு வீடு திரும்பும்
ஆணும் பெண்ணும் முண்டிய டித்து
கைப்பேசி கொண்டு 'ஸெல்ஃபி' எடுக்கும்
வேர்செதுக் காத அடிக்கரும் பாக
கருகரு வென்றே ஓரடி நீளம்
வலியில் விரைக்கும் என்குறி கண்டு
பொறாமை கொள்ளும் அரசனின் முகத்தில்
கொள்ளு வெடிக்கும் அழகைச் சாடையாய்
அரசியும் கண்டு நகுமோ கூறுவாய்
செங்கால் நாராய் செங்கால் நாராய்
செம்புலப் பெயல்நீர் போலே
குற்றம் தண்டனை தாம்கலந் தனவே.
0 0 0









பனங்கிழங்கு

வெந்து வெடித்த
மரவள்ளிக் கிழங்கென
பெண்குறி தின்று
பசியாறி வளர்ந்தது
பதின்பருவ வயிறு
வடித்துக் கொட்டிய
சோறு போலே
படுக்கை யில்நீ
ஆவி பறக்க
அன்று எழுதினேன்
முப்பது வயதில்
காமமும் வயிற்றுப்
பசியும் ஒன்றாய்
கடந்தது வாழ்க்கை
நேற்று நடுப்பகல்
யோனி தாசனைத்
தேடி ஒருத்தி
வந்தாள் பார்த்ததும்
பெண்குறி அற்றவள்
என்பது தெரிந்தது
ஜோல்னாப் பையில்
பனங்கிழங்குக் கற்றை
எடுத்துத் தந்தாள்
பசித்த வயிறு
தின்று நிறைந்தது
குறுகுறு வென்றே
என்னைப் பார்த்தவள்
கட்டிய ணைத்துப்
படுக்கையில் சாய்த்து
என்மேல் படர்ந்தாள்
சுடிதாருக் குள்ளிருந்து
முரட்டுப் பனைக்
கிழங்காய்க் குத்தினான்
நீல அணங்கு.
 0 0 0
Top of Form

கம்பளிப்பூச்சி


Bottom of Form
முதல்பல் விழுந்த அன்று 
அம்மாவைக் கேட்டேன் வாழ்வின் 
முழுமுதற் கேள்வி இதுதான்
இதுவரை பதில்தான் இல்லை
'எப்படிப் பிறந்தேன் அம்மா
எதன்வழி இங்கு வந்தேன்?'

"தோட்டத்து முருங்கை மரத்தில் 
கவையிடை கம்பளிப் பூச்சி
அடைகண்டாய் அதுபோல் தாயின் 
தொடையிடை கடவுளின் ஒற்றைக் 
காலடித் தடமும் கண்டாய்
அதன்வழி பிறந்தாய் மகனே."

'வயிற்றுள் எப்படிப் போனேன் 
பிறகுஏன் வெளியில் வந்தேன்?'

"தலையால் நீவந்த வழியே
உன் அப்பா தலைநு ழைத்தார் 
அதனால்நீ பிறந்தாய் மகனே" 

புரிந்தும் புரியாத வயதில்
விளையாட ஓடி விட்டேன் 
இங்கிருந்து அலுத்தேன் மீண்டும் 
ஆதிஇடம் தேடிப் போனேன்
விதம்வித மாகக் கடவுள்
கால்தடம் கண்டேன் எல்லா 
இடங்களும் நெடுவழிக் கதவம்
 அடைபட்டு இருக்கக் கண்டேன்
 போகுமிடம் தெரிய வில்லை
 இங்கிருக்கப் பிடிக்க வில்லை
 அலைந்த லைந்து மாளவில்லை
 அக்கப்போர் தாங்க வில்லை
 அம்மாவின் புதைக்குழி மேட்டில்
 கால்நீட்டிப் படுத்தேன் நேற்று.
0 0 0






















கேள்வி பதில்
நேரெதிர் வந்தே நின்றாள்
கன்னத்தில் அறைந்தாள் கேட்டாள்;
இன்னுமா  உயிரோ டிருக்கிறாய்?’

“சரிசரி கோபப் படாதே
சாவதற்கு முன்னா லெனுக்கு
ஒரு பாட்டில் சாராயம் தேவை
சுட்டுவிரல் மொத்த நைலான்
கயிறு  இரு மீட்டர்  வேண்டும்
மேலும்  இப்போதே அறைக்கு
வந்து இறுதியாய் என்னைப்
புணர்ந்திட வேண்டும் பெண்ணே
நீபோன பிறகு நானோர்
குழவியாய் தூளியில் தொங்கிய
அதே யூ வடிவக் கொக்கியில்
தொங்குவேன் அந்தரத்தில்
மாலை ஃபோனில் அழைதால்
எடுத்தேன் இல்லை என்றால்
செத்தேன் என்பதைத் தெளிவாய்   
ஈமச் செலவு செய்து
பிணத்தை எரித்திடு தோழி
பாலித்தின் பையில் சாம்பலைத்
திரட்டி கடலில் கரைத்திடு
கரைந்த கடலில் நீ
பார்க்கும் இடமெலாம் பார்வைத்
தைத்து மீண்டும் மீண்டும்
உயிர்ப்பேன்  காதல் தாயே.
0 0 0

அருள்நிறை பன்றி
யோனிதாசனும் பொன்மொழி எழுதினான்
இலக்கியம் செய்ய இடக்க ரடக்கல்
ஏனெனக் கேட்டான் முகத்தை விடவும் 
அவளின் யோனி அழகென எழுதினான்
அம்மா பன்றியின் அடிவ யிற்றில் 
காய்த்துத் தொங்கும் முலைகளின் அழகை 
அவன்தான் எழுதினான் இந்திய நாட்டில் 
பெரியார் மட்டுமே ஒரே அனார்கிஸ்ட்
இலக்கியத் திற்குள் அரசியல் செய்தான் 
கண்திற வாமல் முட்டும் மோதும் 
பத்துக் குட்டிகள் பால்கு டிக்கும்
அம்மா பன்றியின் அருள்நிறை முகத்தில் 
தியான புத்தனின் அமைதி கூடும் 
எழுதினான் எழுத்தில் தன்னை எழுதிலன்
நேற்றையப் பொழுது சாராயக் கடையில்
செத்துக் கிடந்தான் காகம் கொத்தி
ஆண்குறி தின்றது பெண்குறி பறந்தது.
0 0 0







ஆறாம் நிலை
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு
புதுவையி லிருக்கும் அறிந்திலேன் அறிக
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
சாராயக் கடையில் தனியா யிருந்தேன்
தனியா யிருந்தேன் தனிமையி லில்லை
குடித்துத் தெளிந்து மீண்டும் குடித்து
வாயில் பீநாற எதிரே நின்றான்
தண்ணிப் பாம்பு;  புலவரா என்றான்
ஆமாம் என்றேன்; சந்தேகம் என்றான்;
கேளும் என்றேன்; புலவா புலவா
ஆண்குறி ஐந்தை உரிமை கொண்டவள்
ஆறாம் குறியையும் இச்சித் தவளை
காவியம் செய்தான் புதுவையில் பாரதி
பெண்ணியம் பேசும் பேய்கள் அவளை
உச்சிமு கர்கிறார்; பாஞ்சாலி ஆயினும் 
விதம்வி தமாக ஆண்குறி தின்பவள்
பெண்ணியம் பேசுதல் தகுமா சொல்லுதி
என்றான்; ஏறிய போதை இறங்க 
ஓடினே னோடினேன் வாழ்க்கையி னோரம் 
நின்றேன் தனித்தே; தனிமையி லில்லை.
0 0 0







ஆதி வலி
கையடிக்கும் அவஸ்தை
கடவுள் அறியுமா
படைத்த பாடுவை
ஆதியில் ஆதாம்
கேட்டான்; கடவுளும்
குழம்பி நின்றது
தலையைச் சொரிந்து.
அறிவுத் தெளிந்தது
கேட்டவன் விலா
எலும்பினை உறுவி
ஏவால் செய்தது
புணர்ச்சி நிகழ்ந்தது.
காலங் காலமாய்
சுற்றும் பூமியில்
புத்தம் புதியதாய்
பூக்கள் பூத்தன
ஆதாம் இல்லை
ஏவால் இல்லை
கடவுள் என்றோ
காலாவதி யானது.
ஆயினும் என்ன
கணினி யுகத்திலும்
ஆதி மனிதனை
ஞாபகம் கொண்டு
கையடிக் கின்றான்
யோனி தாசன்.
0 0 0






அம்மை அப்பன்
செத்தப் பாம்பை அடித்த டித்து
உயிர்ப்பெறச் செய்தனர் கூடி நின்றவர்
உயிர்த்தேன் மீண்டும் உடம்பில் ஆணாய்
உணர்வில் பெண்ணாய் மழைநா ளிரவில்
ஒருத்தி புணர்ந்தாள் கர்ப்பம் தறித்தேன்
பத்துத் திங்களில் வாயால் கக்கினேன்
தலைச்சன் மகளாய் பிறந்தது மகிழ்ந்தேன்
இரவில் கதிரோன் எரிக்கும் கோடையில்
வந்தவள் புணர்ந்தாள் சுமந்தேன் மீண்டும்
இம்முறை முக்கி ஆசன வாயால்
மகனை ஈன்று மாதோன் மகிழ்ந்தேன்
மூத்தவள் அப்பா என்றே அழைத்தாள்
அம்மா என்றான் இளையோன் திகைத்தேன்
சிலுவையில் செத்து உயிர்த்தவன் அறிவான்
அம்மை யப்பனாய் வாழும் அதிசயம்.
0 0 0










எருக்கு
கைவிரல் சோர்ந்த
சிற்பி சிறு கல்
லெடுத்துச் செதுக்கினான்
எருக்கு மலரை
பிள்ளையார் மட்டுமே
அறிவார் அழகை
தலையில் சூடிய
மலடு இணைந்தால்
அன்றிரவே கரு
தங்கிடும் நிச்சயம்
யோனி தாசனார்
கூற்று மருத்துவம்.
 0 0 0















ஓமும் நானும்

“தாழிடப் படாத கதவுகள் தட்டி 
உள்வரும் பண்பும் பழக்கமு மில்லை 
பரவா யில்லை இறந்தோர் ஆவிகள்
எனைச்சூழ் அறையில் குருதியும் சதையும்
சிதறிய வெளியில் பாதம் படாமல் 
உள்நுழை கின்றாய் வாலைப் பெண்ணே"

'யாரும் அற்ற அறையில் யாருடன் 
ஓயா பேச்சு கடல்மிசை அலைபோல்
காயம் கண்ட உடல்களை மீன்கள் 
கடித்துக் குதறும் நீந்தும் சொற்கள் 
குளித்தப் பிறகும் உந்தன் உடம்பை
விட்டு விலகா தொல்பிண வாடை'
 
"பிணத்தைப் புணர்ந்து சலித்தவன் வாழ்வில்
உயிருடன் ஓர்பிணம் நீதான் பெண்ணே 
உனக்குத் தெரியுமா  என்னுடன் எனக்குத்
தொடரும் பேச்சில் வளரும் சிந்தனை
பேசுவ தாலுயிர் வாழும் அதிசயம்" 

'உறங்கும் பொழுதும் தொடரும் பேச்சு 
நாளைப் பிணமாய்க் கிடந்தும்  தொடரும்
சிதையில் எரிகையில் தீயுடன் பேசுவாய் 
சாம்பலைக் கடலில் கரைத்திட  ஓயா
அலையுடன் பேசுவாய்  கவியே உனைநான்
புணரும் பொழுதில்  முகவாய் அடைத்து
யோனியின் நெடுவாய்த்  திறந்தே ஆன்மா
வுடன்நீ  பேசுவாய் பேச்சாய் இருப்பாய்' 

"ஆதிப் பெருவெடிப் பேநீ  யோனி
வாயால் பேசும் தெய்வதம் இறுதியில்
ஊழி வெள்ளம் உன்னில் பெருகும் 
ஊதி மிதக்கும் ஓம்எனும் சொல்நான்."
0 0 0
























ஒரு வாய் உணவு

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இது
பெண்களால் வளர்ந்த உடம்பு
பசியோடு அவளிடம் போனேன் - 'சொல்
பிடித்தது என்ன?' என்றாள்
"
மனிதர் தவிர்த்து எல்லாம்" - 'நான்
சாப்பிடக் கேட்டேன்' ; "நானும்
உரைத்தது அதுவே" என்றேன் - 'இன்று
என்னிடம் இருப்பது நானே'
"
சமைத்துத் தந்தால் தின்பேன்" - அவள்
மேலாடை விலக்கி நின்றாள்
இடக்கை இடமுலை பற்றிட - உடன்
வலக்கை அடியோ டறுத்தது
மாங்கனி நறுக்கிய கத்தி - முதன்
முதலாய் முலைப்பழம் அறுத்தது
திகைப்பு பதைப்பு தவிப்பு - நான்
காடுமலைத் தாண்டி ஓடினேன்
சிறுபை நிறைய வண்ணாத்தி - அள்ளி
அப்பினேன் மார்பில் உயிர்மூலிகை
துணியால் இறுக்கமாய் கட்டினேன் - குருதி
வட்டக் கண்ணாடிக் கிண்ணத்தில்
பீங்கான் தட்டில் கொங்கை - ஆக்கிச்
சூடு ஆறாமல் இருந்தது
மயக்கம் தெளிந்த மங்கை - வலி
நகையோடு பார்த்துச் சிமிட்டினாள்
'
ஓவியன் வான்கோ ஒருத்திக்கு - வலக்
காது துணித்து அளித்தனன்
இடமுலை அறுத்துச் சமைத்து - கவியே  
உனக்குச் சுவையாய் படைத்தேன்
குருதிக் கிணையாய் போதை - செரிந்த
திரவம் இல்லை உலகில்
தொடுகறியோடுப் பருகி - பசி
யாறி என்னைத் தழுவுதி
உன்னை ஈன்றவள் தாயானாள் - இவள்
ஊட்டிவளர்த்துத் தந்தையு மானாள்
எழுது என்னை எழுது - எழுத்தால்
இடமுலை முளைக்குமே விரைந்து.'

சக்கர நாற்காலியில் பறவை மனிதன்

சுற்றி வளைத்த மதிலுக் குள்ளே
கிழக்குக் கடலின் வளர்கரை காடு
காட்டுக் குள்ளே இரண்டு ஏரிகள்
மடுவில் ஆலம் நெடுபனை தென்னை
வட்டக் காட்டின் தொடுவான் முட்டித்
தவிக்கும் விரிகடல் பச்சைப் பந்தலின்
மேலே கதிரோன் உருளும் வெளிச்சம்
வழியும் விரிவெயில் தணியும் குளிரும்
ஊர்ந்தவை பறக்கும் நடந்தவை நீந்தும்
நெளிந்தவை நிமிரும் புணர்ந்தவை ஈனும்
விண்மீன் பூத்துக் குலுங்கும் இரவில்
அங்கவை ஏரியும் பகலில் மண்மீன்
துள்ளிச் சாடும் சங்கவை ஏரியும்
மனிதப் பெண்ணாய் உருவம் பூணும்
ஆண்துணைத் தேடும் கதைகள் ஆயிரம்
மதிலுக்கு வெளியே அம்மண அலைச்சல்
நூறா யிரமா யிரம்மா பறவைகள்
சரண்புகும் ஆலயம் நடுவே தனியே
ஆதியும் அந்தமும் இல்லா பெருவெளி
ஒற்றைக் கடவுளாய் பரந்துத் திரியும்
‘ஆர்னிதா லஜிஸ்ட் பறவை மனிதன்
காடு முழுதும் அவன்தனி யுடைமை
பறவை எல்லாம் அடர்காட் டுடைமை
அவனை அறிந்த பெண்பால் பறவை
ஒவ்வோர் ஆண்டும்  வந்துப் போகும்
அந்த இனத்தில் புவிமிசை இறுதியாய்
உயிர்வாழ் பறவை பெண்குறி அற்றது
தன்னைப் பிரிந்த காதலி பெயரால்
பறவை இயலில் நிலைபெறச் செய்தான்
நடக்கும் ஆண்டில் காதல் பறவை
கடற்கரை காட்டில் அவனைத் தேடி
வாரா வலியில் இரவும் பகலும்
பறவையைத் தேடித் தேடி அவனைச்
சுமந்தே சுற்றிச் சுழலும் சக்கரம் 
கால்கள் அற்றவன் அமரும் இருக்கை
சக்கரம் பொருத்திச் சுழலும் எண்திசை
எழுந்து நடக்க இயலா உடம்பால்
பறக்கும் உயிரைத் தேடித் தவித்தான்.
0 0 0






கங்கை பிறந்த கதை



அமைதியாய் ஓடும் ஆறு போலே

உறங்கும் உடம்பின் இருகரை எதிரெதிர்
குத்துக் கோட்டில் வெட்டப் பட்ட
பாதி சிவமும் ஆதி சிவையும்
ஒற்றைக் காலில் நின்ற நிலையில்
தூண்டில் போட்டு மீன்பிடிக் கின்றார்
சிவத்தின் கழுத்தில் வெட்டப் பட்ட
பாதி பாம்பு மீதி பாம்பு
முள்ளில் இரையாய் வலியில் நெளியும்
அன்னை வீசிய தூண்டில் முள்ளில்
இரையும் அவளே எதிரில் தயங்கும்
மீனும் அவளே யாதும் ஆகி
நிற்கும் அணங்கு; உறங்கும் ஆறு
புரண்டுப் படுத்தது அலைகள் மோதிட
கரைகள் பதறின ஒற்றைக் காலை
அலைகள் இடறிட நீரில் விழுந்தவன்
கோலம் கண்டு அடக்க முடியா
சிரிப்பில் வெடித்துச் சிதறும் அன்னையின்
ஏளனப் பழிப்பில் பிணக்க முற்று
ஓடும் நீரில் மூலி உடம்பை
ஓட விட்டுத் துணையைப் பிரிந்தான்
மாறியக் காட்சியில் ஆற்றங் கரையில்
பாதி உடம்புடன் தனியாய்த் தவித்தாள்
பெண்ணைத் தனிமைப் பேயாய்த் திரிக்கும்
ஒற்றைக் காலால் ஆற்றை உதைத்தாள்
மருண்ட ஆறு ஊரை விலகி
ஓட்டம் பிடித்தது கரையில் வாழ்ந்தக்
குடிகள் குழம்பினர் உழவம் பொய்த்தது
பஞ்சம் பட்டினி செத்தவர் பிழைத்தவர்
ஆற்றைத் தேடியே எண்திசை ஏகினர்
அப்பனைத் தேடி அன்னையும் அலைந்தாள்
வடதிசை பறந்தாள் உச்சிச் சிகரம்
பாதம் உரசக் குனிந்துப் பார்த்தாள்
பனிமலை வெளியில் எரியும் உருவம்
ஆதியும் அந்தமும் அறுத்தச் சோதியாய்
தணன்றவன் அன்னையின் பாதம் கண்டதும்
தத்தித் தோமெனக் குதித்துத் தாவி
எட்டிக் காலைப் பிடித்து இழுத்தான்
பொதிப்பனித் தூவலில் விழுந்த உடம்பை
எரிய எரிய அள்ளிப் புணர்ந்தான்
இழையும் உடம்பின் வெப்பப் பெருக்கில்
சிகரம் உருகிக் கங்கை பிறந்தாள்
நடந்த வழியெலாம் குடிகள் குழுமினர்
ஆறும் ஊரும் செழித்தக் கரையில்
இங்கே யாரும் மீன்பிடிக் காதீர்
அரசுகள் வைத்த விளம்பரப் பலகை
தாங்கியக் கம்பம் உச்சந் தலையில்
இறங்கிட உறக்கம் கலைந்தேன் நானே
அமைதியாய் ஓடும் ஆறு போலே
உறங்கும் உடம்பின் இருகரை எதிரெதிர்
நானும் நீயும் சிவனும் சிவையும்.

0 0 0
















காதுகள்
போர்வயிற் பிரிந்தத் தலைவனைப் பார்த்து
வாயிற் கதவம் இராப்பகல் திறக்கச்
சூழும் வணிகர் குளம்பொலி கேட்டு
புரவிசூழ் தலைவன் வருகிறா னென்று
பதறிய டித்துப் படுக்கை விடுத்து
ஓடிப் பார்த்து அடிக்கடி நொடிந்த
தலைவிக் காகத் தலைவன் கொணர்ந்த
காதல் நினைவுப் பரிசுகள் என்ன?
ஆற்றங் கரையில் பாங்கியை மடக்கிப்
பாங்கன் கேட்டான் பாங்கியும் சொன்னாள்:
படைக்களம் வீழ்ந்தப் பகைவர் உடல்களின்
காதுக ளறுத்து நெகிழிப் பைகளில்
மூட்டைக் கட்டித் தூக்கி வந்தான்
இரண்டி ரண்டாய் காதுகள் பிரித்தாள்
ஒன்பது நூறுகள் ஒன்பது பத்துகள்
ஒன்பது ஒன்றுகள் சோடியாய் இருந்தன
இன்னும் ஒன்று சோடிச் சேர்ந்தால்
கணக்கு ஆயிரம் நேராய் இருக்கும்
தலைவியின் பூமுகம் வருத்தம் இழையக்
கண்ட தலைவன் குறுநகை பூத்துத்
தனது காதுகள் இரண்டை அறுத்து
நேர்செய் கணக்கில் மகிழ்ந்தனள் மாதே.
0 0 0









பறவையின் தந்தையாதல்


மரம் என்பது மொழியால் ஒருமை
எல்லா மாகியே நின்றிடும் இருப்பில்
ஒருமை பல்கியே நிறைந்த பன்மை
யாரோ சொல்லிப் போனார் வாழ்வில்
அமைந்த வீட்டை விடுத்து வெளியில்
திரியும் வேளையில் ஒதுங்கிட ஒருமரம்
குச்சிகள் சேர்த்துப் பின்னியக் கூட்டில்
அம்மா பறவை அவயம் இருந்தது
வீறல் விழுந்த ஓட்டின் வழியே
பூமியைத் திறந்து குழந்தைகள் வந்தன
மரத்தின் கிளைகளில் தத்தியக் கால்கள்
காம்பில் தொங்கும் பழங்கள் தின்றன
நாள்பட இறகுகள் அடர்ந்த குஞ்சுகள்
அம்மா வழியில் வெளியைத் திறந்தன
தனிமையில் நின்ற மரமே எனினும்
தனியாய் இல்லை என்பதை அறிக;
மரத்தடி நிழலில் நேற்று படுத்தேன்
அங்கே இன்று வெட்டப் பட்ட
மரத்தின் குருதி அங்கும் இங்கும்
சிந்திக் காய்ந்தது துண்டுக ளான
உறுப்புகள் குவிந்து ஓரமாய் இருந்தன
தாய்மை அடைந்த தலைமகள் பறவை
அவயம் நோற்க நினைவில் அசைந்த
மரத்தைத் தேடிப் பறந்து வந்தது
நிழலைத் தேடிய என்னைப் பார்த்ததும்
வருத்தம் தேங்கிய கண்கள் கசிந்தது
மரத்தை இழந்த ஊரின் நடுவில்
நானும் பறவையும் அநாதை ஆனோம்
வீட்டில் சேர்க்கும் பாதையில் நடந்தேன்
தலைக்கு மேலே பறவைத் தொடர்ந்தது
யாரும் இல்லா வீட்டைத் திறந்து
நுழைந்த என்னுடன் பறவையும் அடைந்தது
பழகப் பழகப் பறவையின் முகமோ
வாழ்வில் என்றோ பிரிந்த மகளின்
சாடையில் தெரிந்தது வாழ்வின் அற்புதம்
பறவையின் தந்தையாய் மாறும் அதிசயம்
முட்டைக ளிட்டுக் குஞ்சுகள் பொரித்த
மகளின் முகத்தில் தாய்மையின் அழகு
வீட்டின் வெறுமையில் குமைந்த உயிர்கள்
அங்கும் இங்கும் முட்டி மோதி
அலகுக ளாலே கொத்திப் பறந்திட
பூமியின் மேலே அந்தர வெளியில்
சுற்றும் துணைக்கோள் ஆனது வீடு
நிலவைத் தாண்டிய வட்டப் பாதையில்
எல்லாம் கடந்த ஆழ்வெளி உச்சியில்
நகரும் வீட்டின் சாளரம் திறந்து
கடவுளைப் பார்த்துக் கையசைக் கின்றேன்
0 0 0


















மருத்துவன்
கால்நடை மருத்துவன் வீட்டுக் காதல்
காட்டுத் தன்மை கொண்டுத் துலங்கும்
நான்கு கால்களில் நடக்கும் விலங்குகள்
காமக் களியில் மனிதரை வெல்லும்
கால்நடை மருத்துவன் காலால் நகர்வான்
சக்கரம் பொருத்திய வாகனம் தவிர்ப்பான்
பாலியல் நோக்கில் ஒவ்வோர் அசைவும்
காரணக் காரியம் செரிந்தவை என்பான்
வீட்டில் அடைந்தால் ஆடைத் துறப்பான்
அடுப்பே இல்லா அடுப்பங் கரையில்
அம்மண உடம்பில் மனையாள் சமைப்பாள்
படுக்கை யறையில் பச்சை உடம்பியை
கடித்துக் குதறித் தின்றுப் புணர்வான்
பசுப்புல் பத்தையைப் பதித்தது போலே
அடர்மயிர் யோனியின் கருமை மேய்வான்
அக்குள் கவையின் காக்கைக் கூட்டில்
முட்டையைக் கவர்ந்து நித்தம் குடிப்பான்
காட்டுச் சிறுக்கியின் சிறுத்தைக் காமம்
இயல்வெளி திகைக்க வெண்மதி முகத்தில்
விரல்நகக் கீறலின் குருதிச் சிவக்கும்
தின்னத் திகட்டா எதிர்பால் உடம்பின்
மூலிகை மருத்துவக் குணத்தை அறிந்தவன்
இலக்கியம் காணா இணையரின் காமம்
வள்ளுவன் எழுதா ஏட்டில் எழுதினேன்
கால்நடை மருத்துவன் இயற்கையில் ஒன்றிய
வாழ்க்கை வாழ்ந்தான் இறைமையில் கலந்தான்
உடம்பை விழுங்கி உடம்பை ஈன்று
உடம்பினுக் குள்ளே உடம்பினைத் திணித்து
உடம்பால் உடம்பை படைக்க வல்லான்
உடம்புகள் செய்தான் உலகுசெய் தானே.
0 0 0

















சிற்பியின் மகள்

கல்லில் வடித்த சிற்பம் போலே
சொல்லில் வடித்த கவிதை கேட்டாய்
ஆண்பால் தந்தை பெண்பால் தொட்டு
எழுதிய ஒருசொல் பாமகள் கவிதை
கடலைப் போலே ஒற்றைச் சொல்லால்
நிலைத்த இருப்பு; மகளைப் பெற்றவன்
ஆண்மைத் துறந்து பெண்மையில் திரண்ட
பூரணன்; மகளே தாயும் ஆனவன்
ஆக்கினை எனையே; சிற்பி நிலவைச்
செதுக்கிய போது சிதறிய கற்துகள்
விண்மீன் ஆயின; மகளைச் சிற்பி
செதுக்கியப் பொழுதில் தன்னையும் வடித்து
முழுமை ஆயினன்; சிற்பம் என்பதை
முன்னால் நிறுத்தி சிற்பி என்பவன்
பின்னால் மறைந்தான்; வடித்தப் பாறையில்
உயிராய் விளைவது படைத்தவன் குருதி
படைப்பில் படைத்தவன் இல்லா திருப்பதே
கலையின் இலக்கணம்; கடவுளைப் படைத்த
மனிதன் அதற்குத் தன்னைப் போலொரு
போலி செய்தான்; தோற்றப் போலியில்
தன்னைப் பார்த்தான் கலைஞன் தோற்றான்
போலி செய்வது படைப்பா காது
கடவுளைப் படைத்துத் தோற்றப் பிறகு
மகளைப் படைத்து வென்றான் கலைஞன்
மகள் என்பது தன்னைப் பெருக்கிப்
பெருக்கிப் பெருகும் படைப்பின் உருவகம்
கடவுள் என்பது தன்னில் தானே
நின்று எரியும் அருட்பெருஞ் சோதி
மகளே மகளே உன்னைப் படைத்தேன்
நின்று எரியும் சோதியும் சமைத்தேன்
கடவுளைக் கடந்த அரும்பே ரிருப்பு
உன்னைப் படைத்து உன்னுள் ஒடுங்கி
அற்றுப் போனேன் அனைத்தும் ஆனேன்.
0 0 0
 





 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ரமேஷ் பிரேதன் நல்லபாம்பு: நீல அணங்கின் கதை நல்லபாம்பு: நீல அணங்கின் கதை (நாவல்) NALLABĀMBU: tale of blue goddess (novel) Ramesh Predan வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை   திருவள்ளுவர்                                                                                              நன்றி புதிய பேசும் சக்தி மாதயிதழ் ஆசிரியர். ஜெயகாந்தன் எஸ். செந்தில் குமார் பேராசிரியர்.ர.சுரேஷ் பிரேமா மோகனா – இசை கீழை.இலக்கியன் வே.மு. பொதியவெற்பன் ஜெயமோகனுக்கு ... ஒன்று 0 அவள் பெயர் நல்லதங்கம். நல்லபாம்புக் கடித்துச் செத்தாள். அவள் கணவன் செம்புலியும் இரண்டு மகன்களும்  செத்தவளை எரித்துவிட்டு பாம்பைக் கொல்ல காடு தேடி ஊர்க் கடந்து நாடு தாண்டி தலைமுறை தலைமுறையாக நாடோடிகளாய் அலைந்தனர். தலைமுறைகளின் வழியாக பாம்பைத் தேடி தாங்கள் திரியும் கதை ஆயிரமாயிரம் வாய்களின்  வழியாகச் சொல்லப்பட்டு கா
THUS SPAKE பின்நவீனத்துவப் பன்றி ------------------------------------------------------------------- தோழர்களே… விதை என்ற சொல்லிலிருந்து கவிதை என்ற சொல் உருவானது . தொல்காப்பியம் தோன்றுவதற்கு முன் வாழ்ந்த பாணன் – பாடினி மரபினரிடையே அச்சொல்லுக்கான பொருள் புழக்கத்திற்கு   வந்தது . ஐந்திணைகளிலும் திரிந்த இவர்கள் பசிக்குப் பாக்களைத் தின்று யாழினைப் பருகி உயிர் வளர்த்தனர் . சங்கம் என்பதை கனவிலும் அறியாத நாடோடிகளான இவர்கள் வரலாற்றில் பாணர் , பறையர் , பரதவர் , பள்ளர் , பாண்டியர் எனப் பல்வேறான பகரச் சொற்களால் குறிப்பிடப்படுகின்றனர் . பா என்ற ஓரசைச் சொல்லால் அடையாளப்படுத்தப்பட்ட இவர்கள் இன்று எழுத்து வழக்கில் தமிழர் என்றும் பேச்சு வழக்கில் தமிலர் என்றும் குறிப்பிடப்படுகின்றனர் . இந்தத் தமிழர்களின் நவீன காலம் என்பது ஈராயிரமாண்டுகளிலிருந்து வரையறை செய்யப்படுகிறது . பின்நவீனக் காலம் என்பது பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து – மன்னிக்கவும் ; பிரெஞ்சு மாணவர் புரட்சியிலிருந்து உலக அளவில் கணிக்கப்படுகிறது . அப்புரட்சி நடந்தது 1968